லண்டன்:
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரிட்டனின் லண்டனில் உள்ள வங்கதேச தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய வம்சாவளி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் சமீப நாட்களாக ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே, ஹிந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை, மத நிந்தனை செய்ததாக கூறி, அங்குள்ள கும்பல் மரத்தில் தலைக்கீழாக தொங்கவிட்டு உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்பவரும் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களுக்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, ஹிந்து மக்களுக்கு ஆதரவாக டில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட்டு இந்திய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், வங்கதேசத்தில் சிறுபான்மையினமான ஹிந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை கண்டித்து, லண்டனில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட்டு இந்திய வம்சாவளி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் போது, வங்கதேசத்தின் தேசிய கீதமான ‘அமர் ஷோனர் பங்களா’ இசைக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக, ஹிந்துக்களுக்கு ஆதரவாக நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
