ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத முதல்வருக்கு மதச்சார்பின்மை பற்றி பேச தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி:
ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் மு.க. ஸ்டாலின்க்கு மதச்சார்பின்மை குறித்து பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என, திருநெல்வேலியில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்கும் முதல்வருக்கு, ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல கூட மனம் வரவில்லை என குற்றம்சாட்டினார். அனைத்து மதங்களையும் சமமாக பார்க்காத ஒருவர் மதச்சார்பின்மை குறித்து பேசுவது பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த தவறிவிட்டதாகவும் அவர் சாடினார். இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு மாநில அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.
அறுவடை மற்றும் நாற்று நடுதல் போன்ற விவசாய காலங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், விவசாயப் பணிகள் பாதிக்கப்படாத வகையிலும் இந்த திட்டத்தில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் விளக்கினார்.
ஆதிச்சநல்லூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டு பல திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும், தமிழர்களின் கலாசாரத்தை பிரதமர் மோடி உலக அளவில் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். காசி மற்றும் குஜராத்தில் நடைபெற்ற தமிழ் சங்கமம், 63 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு, ஐ.நா. சபை வரை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற முழக்கம் ஆகியவை இதற்கான சான்றுகள் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.14 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் திறக்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மத்திய அரசின் பி.எம்.எஸ்.எஸ்.ஒய். திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாகவும், அதில் பெரும்பங்கு மத்திய அரசின் நிதி எனவும் அவர் கூறினார். அதேபோல், கிரிட்டிக்கல் கேர் சென்டரும் மத்திய அரசின் திட்டமே என தெரிவித்தார். மத்திய அரசு கட்டிய திட்டங்களுக்கு மாநில அரசு தன் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் மாநில அரசு தன் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டுவது திமுக அரசின் வழக்கமான நடைமுறை எனவும், இந்த ‘ஸ்டிக்கர் ஒட்டும் அரசு’ விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 2026 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
