“ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வேண்டும்” – ஓவைசி பேச்சுக்கு பா.ஜ., கடும் பதிலடி
மும்பை:
“ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் நாட்டின் பிரதமராக வேண்டும் என்பது என் நீண்டகால கனவு,” என அசாதுதீன் ஓவைசி தெரிவித்த கருத்து, அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, “அப்படி விரும்புவோர் பாகிஸ்தானுக்கு தாராளமாக செல்லலாம்,” என பா.ஜ., தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., – சிவசேனா – தேசியவாத காங்., அடங்கிய ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த மாநகராட்சி தேர்தலில் ஓவைசியின் AIMIM கட்சியும் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஓவைசி பேசுகையில், “பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களே பிரதமராக முடியும் என கூறுகிறது. ஆனால், அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம், எந்த குடிமகனும் பிரதமர், முதல்வர் அல்லது மேயர் ஆகலாம் என உரிமை வழங்குகிறது. ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் பிரதமராக வேண்டும் என்பது என் கனவு,” என்றார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ., மூத்த தலைவரும், மஹாராஷ்டிர அமைச்சருமான நிதேஷ் ரானே, “ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் ஓவைசி இவ்வாறு பேசக் கூடாது. மும்பையில் ஹிஜாப் அல்லது புர்கா அணிந்த பெண் மேயராக முடியாது. அப்படி விரும்புபவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்,” என விமர்சித்தார்.
இதற்குப் பதிலாக, ஏ.ஐ.எம்.ஐ.எம்., செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான் கூறுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி யார் வேண்டுமானாலும் பிரதமர், முதல்வர் அல்லது மேயர் ஆக முடியும். அப்படி இருக்கையில் ஓவைசி கூறியதில் என்ன தவறு?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, “நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம். ஆனால் அதற்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும். வெறும் வாய் சவடால் போதாது. ஹிஜாப் அணிந்த பெண்ணை பிரதமராக்க கனவு காண்பதற்கு முன், ஓவைசி தனது கட்சியின் தலைவராக முதலில் ஹிஜாப் அணிந்த பெண்ணை நியமிக்க வேண்டும்,” என கடுமையாக விமர்சித்தார்.
