ஹவுரா–குவஹாத்தி ஸ்லீப்பர் வந்தே பாரத் துவக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
மால்டா: மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாம் மாநிலத்தின் குவஹாத்தி இடையே, படுக்கை வசதியுடன் இயங்கும் முதல் ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 170க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பகல் நேர சேவையாக இருந்த இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இரவு நேர பயணத்திற்கான ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று, மத்திய அரசு படுக்கை வசதியுடன் கூடிய புதிய ரயில்களை தயாரித்து, சோதனை ஓட்டங்களையும் நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்கம் – அசாம் இடையே முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. மால்டா ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹவுரா – குவஹாத்தி இடையிலான இந்த ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். முன்னதாக, ரயிலில் ஏறி ஆய்வு செய்த அவர், ஓட்டுநர், மாணவர்கள் மற்றும் பயணிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும், குவஹாத்தி – ஹவுரா இடையிலான எதிர்திசை ரயில் சேவையும் காணொலி மாநாடு மூலம் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நியூ ஜல்பைகுரி – நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி – திருச்சி, அலிபுர்துவார் – பெங்களூரு மற்றும் அலிபுர்துவார் – மும்பை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள நான்கு அம்ரித் பாரத் ரயில்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இதோடு, சுமார் 3,250 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் மற்றும் சாலை திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதில், பலூர்காட் – ஹிலி புதிய ரயில் பாதை, நியூ ஜல்பைகுரியில் சரக்கு பராமரிப்பு வசதிகள், சிலிகுரி லோக்கோ பராமரிப்பு நிலைய மேம்பாடு மற்றும் ஜல்பைகுரி மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில்களுக்கான பராமரிப்பு வசதிகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் அடங்கும்.
ஸ்லீப்பர் வந்தே பாரத் சிறப்பம்சங்கள்
ஹவுரா – குவஹாத்தி இடையிலான 956 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 14 மணி நேரத்தில் கடக்கும். இதனால் வழக்கமான பயண நேரத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் குறையும். இந்த ரயிலில் 11 மூன்றாம் வகுப்பு, 4 இரண்டாம் வகுப்பு மற்றும் ஒரு முதல் வகுப்பு என மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன.
விபத்துகளை தடுக்கும் ‘கவாச்’ பாதுகாப்பு அமைப்பு, அவசர தொடர்பு வசதிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 400 கிலோமீட்டர் பயணத்திற்கு மூன்றாம் வகுப்பு கட்டணம் 960 ரூபாய், இரண்டாம் வகுப்பு 1,240 ரூபாய், முதல் வகுப்பு 1,520 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,000 கிலோமீட்டர் தூரத்திற்கு 2,400 முதல் 3,800 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். விமானக் கட்டணத்தை விட இது குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் மொத்தம் 823 பயணிகள் படுத்துக் கொண்டு பயணம் செய்ய முடியும். இதில், மூன்றாம் வகுப்பில் 611 பேர், இரண்டாம் வகுப்பில் 188 பேர் மற்றும் முதல் வகுப்பில் 24 பேர் பயணிக்கலாம். ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களில் வி.ஐ.பி., பயண பாஸ்கள் அனுமதிக்கப்படாது; உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரை
மால்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் நிரந்தர வீடு, தகுதியுள்ளவர்களுக்கு இலவச ரேஷன் கிடைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். மத்திய அரசு வழங்கும் நிதி மற்றும் உதவிகளை திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் மக்களிடம் சேரவிடாமல் தடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஒடிசா, திரிபுரா, அசாம், பீஹார், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பா.ஜ., பெற்ற வெற்றியை சுட்டிக்காட்டிய அவர், மேற்கு வங்கத்திலும் நல்லாட்சி அமைய வேண்டும் என்றார். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அனுமதிக்காத ஒரே மாநிலம் மேற்கு வங்கம் என்றும், வெள்ள நிவாரண நிதி உள்ளிட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடையாமல் தடுக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய சவாலாக ஊடுருவல் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், பா.ஜ., ஆட்சி அமைந்தால், ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏழைகளை அச்சுறுத்தும் அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
