திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வசித்து வந்த குடியிருப்போரின் அடிமனை உரிமை தொடர்பான வழக்கில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
கோவில் நிலத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்த 41 பேர், தங்களுக்கு அந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என 2007ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 19 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் நிலத்தில் உள்ள அடிமனைகள் ரெங்கநாதர் கோவிலுக்கே சொந்தமானவை என தீர்ப்பளித்தார். அந்த இடங்களில் வசிப்போர் அடிமனைக்கு உரிமை கோர முடியாது என்றும் குறிப்பிடப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மூன்று மாதங்களுக்குள் வீடுகளை காலி செய்து, நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. முன்பு வழங்கப்பட்ட பட்டாக்கள் இருந்தால் அவற்றையும் ரத்து செய்ய வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, கோவில் நிலத்தில் வசித்து வரும் பல குடும்பங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நகர் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஸ்ரீரங்கம் பகுதியில் பல தலைமுறைகளாக ஆயிரக்கணக்கானோர் குடியிருந்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு சுமூகமான தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
