சென்னை: “நான் திமுகவில் இணைந்து விட்டேன். கடந்த காலங்களைப் பற்றி கவலையே இல்லை. அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை,” என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணாதுரை தொடங்கிய தாய்க்கழகமான திமுகவில் இணைந்துள்ளேன். என்னை இணைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. அண்ணாதுரை மற்றும் கருணாநிதி காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்து கட்சியையும் ஆட்சியையும் ஸ்டாலின் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என்பதை உணர்ந்து மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன்.
அரசியலில் ஆணவத்தோடு நடந்து கொண்டிருக்கும் இபிஎஸ் காரணமாக அதிமுக இனி வெற்றி பெற முடியாத நிலை உருவாகி விட்டதாக கூறினார். லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஸ்டாலின் ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு நடத்தும் இலக்கணத்துடன் செயல்படுகிறார் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் அர்ப்பணிப்புடன் ஆட்சி செய்து வருகிறார் என்றும் கூறினார். அடித்தட்டு மக்களும் மேல்த்தட்டு மக்களுடன் இணையாக வாழ்வாதாரம் உருவாக்கும் நோக்கில் ஆட்சி நடைபெறுகிறது என்றார்.
பெண்கள் குடும்பத் தலைவிகளாக மகிழ்ச்சியுடன் வாழ தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சட்டசபை வரலாற்றில் அண்ணாதுரை அனைத்து கட்சிகளையும் அரவணைத்தது போல, ஸ்டாலினும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளார் என்றார்.
பார்லிமென்ட் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றதாகவும், மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் கூறினார். திராவிட இயக்கத்தை காக்க ஸ்டாலின் முன்னணி தலைவராக உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
தான் முதல்வராக இருந்தபோது கருணாநிதி தன்னை “பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம்” என பாராட்டியதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன் என்றார். திராவிட இயக்கத்தின் கொள்கையை காக்க திமுக தலைசிறந்த இயக்கம் என்றும் தெரிவித்தார்.
திமுகவில் இணைந்தது தனிப்பட்ட முடிவு என்றும், எந்தவித அழுத்தமும் இல்லை என்றும் கூறினார். அரசியல் நாகரிகம் மற்றும் அனைவரையும் அரவணைக்கும் பண்பு அதிமுகவில் இல்லை என்றார்.
வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் வாய்ப்பு வழங்கினால் போட்டியிடத் தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்தார். இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் மூலம் தனது முடிவை பாராட்டி வாழ்த்துகள் கிடைத்ததாகவும் கூறினார்.
“நான் திமுகவில் இணைந்து விட்டேன். கடந்த காலங்களைப் பற்றி கவலையே இல்லை. திமுக தீய சக்தி என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை. திமுகவை எதிர்க்கும் சக்தி அரசியலில் இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.
