சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் **எஸ்.பி.வேலுமணி**க்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் யாரையும் பாதுகாக்கவில்லை; மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலை பணிகளுக்கான டெண்டர்கள், அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக தி.மு.க., தரப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி, கே.விஜயகார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் பொதுத்துறை செயலர், விஜிலன்ஸ் ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோர் சார்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம், வேண்டுமென்றே செய்யப்பட்டது அல்ல என ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்,
“வழக்கு தொடர ஒப்புதல் கோரி அனுப்பிய கடிதம் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. அதற்காக நினைவூட்டல் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. எந்த அதிகாரியையும் பாதுகாக்கவில்லை. அவர்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
