திருவனந்தபுரம்/புதுடில்லி: காங்கிரஸ் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
கேரளாவில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மணிசங்கர் அய்யர் பங்கேற்று பேசினார். அப்போது, “காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அது நடக்கும் என நம்பவில்லை. கம்யூனிஸ்ட் தலைவர்களை விட, காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அதிகமாக எதிர்க்கின்றனர்,” என்றார்.
மேலும், “கட்சியின் கொள்கைக்கு எதிராக சசி தரூர் செயல்படுகிறார். நிர்வாகிகள் தெளிவான நோக்கமும் திட்டமும் இன்றி உள்ளனர். பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் கேரளா நாட்டுக்கே முன்னோடியாக திகழ்கிறது. வரும் தேர்தலில் பினராயி விஜயனே வெற்றி பெறுவார்,” என கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா பதிலளிக்கையில், “மணிசங்கர் அய்யரின் கருத்துக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. அவர் பேசுவது தனிப்பட்ட கருத்து,” என்றார்.
இந்நிலையில், டில்லியில் நிருபர்களிடம் மணிசங்கர் அய்யர் மீண்டும் கருத்து தெரிவித்தார். “மத்தியில் ஆட்சி அமைக்க ‘இண்டி’ கூட்டணியை ஒருங்கிணைப்பது அவசியம். அதற்கான திறன் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளது. அவர் வெற்று முழக்கங்களை முன்வைக்காமல், கூட்டாட்சியை வலுப்படுத்தும் பிரச்னைகளை பேசுகிறார்,” என்றார்.
அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையை குறிவைத்து அவர் கடுமையாக விமர்சித்தார். “கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளை கையாள முடியாத நிலை உள்ளது. தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் போன்றோர் தலைமைக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குகின்றனர். ஒருவருக்கொருவர் மோதும் தலைவர்களை கொண்ட கட்சிக்கு மக்கள் எவ்வாறு ஓட்டளிப்பர்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “நான் இன்னும் காங்கிரசில் தான் உள்ளேன். என்னை நீக்கினால் வெளியேற தயார்,” என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமையை குறிவைத்து மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகள் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
