விவாத மேடை மோதலாக மாறியது; எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் தாக்கப்பட்டது பரபரப்பு
சென்னை:
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதம், திடீரென தள்ளுமுள்ளு மற்றும் தாக்குதலாக மாறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தின் படப்பிடிப்பு அரங்கில் நேற்று இரவு அரசியல் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா, திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், மேலும் திமுக ஆதரவாளரான செந்தில் வேல் ஆகியோர் பங்கேற்றனர்.
விவாதத்தின் போது கருத்து மோதல் கடுமையாகி, கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. குறிப்பாக எஸ்.ஜி.சூர்யா மற்றும் செந்தில் வேல் இடையேயான வாக்குவாதத்துக்குப் பிறகு, செந்தில் வேல் செல்போன் மூலம் திமுக நிர்வாகிகளை சம்பவ இடத்திற்கு அழைத்ததாக பாஜக தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவர்கள் வந்த பின்னரே தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு அரங்கில் இருந்து வெளியே வந்த எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட பாஜகவினரை, அங்கு திரண்டிருந்த திமுகவினர் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. மேலும், கட்டடத்தின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போலீசார் பெயரளவில் மட்டுமே தலையிட்டதாகவும் பாஜக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாஜக மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான தொண்டர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனிடையே, படப்பிடிப்பு அரங்கில் இருந்து சிசிடிவி பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அரங்கிற்குள் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுவது கூடுதல் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், “பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்து திமுகவினர் நடத்திய தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்து வேறுபாடுகளை வன்முறையால் அடக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது,” என தெரிவித்தார். இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
