புதுடில்லி: போட்டி நாடுகள் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளை விட, அமெரிக்காவுடன் இந்தியா பெற்றுள்ள வர்த்தக ஒப்பந்தம் மிகச் சிறப்பானது என்றும், இந்த ஒப்பந்தத்தில் விவசாயிகள் மற்றும் பால்வளத்துறையின் நலன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக நேற்று டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அவமதிப்பு
இதுகுறித்து டில்லியில் நிருபர்களிடம் பேசிய பியூஷ் கோயல் கூறியதாவது:
இந்த விவகாரம் குறித்து பார்லிமென்டில் பேச விரும்பினோம். ஆனால் இன்று பார்லிமென்டில் நடந்தது அவமானகரமான காட்சி. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் பார்லிமென்ட்டை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டன.
சபாநாயகர் இருக்கையை நெருங்கி அவரை அவமதித்தனர். இதற்காக ராகுலுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் செயல்பாடுகளால் தான், ஒப்பந்தம் குறித்து பார்லிமென்டில் பேச முடியாமல், வெளியே வந்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிறந்தது
பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்புடன் கொண்ட நெருங்கிய நட்பு மற்றும் உறவை பயன்படுத்தி இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தியா பெற்றுள்ள ஒப்பந்தம், அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் போட்டியிடும் நாடுகள் பெற்ற ஒப்பந்தங்களை விட மிகச் சிறந்ததாகும். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் ஒப்பந்தமாகும்.
விவசாயிகள் நலன்
இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய பொருளாதாரம், 140 கோடி மக்கள், ஏழைகள், விவசாயிகள், மீனவர்கள், கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயம் மற்றும் பால்வளத்துறையின் நலன் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளமாக அமையும்.
மகிழ்ச்சி
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுமதி, ஐடி துறை, நவீன தொழில்நுட்பம், சர்வதேச திறன் மையங்கள், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
சிறுகுறு தொழில்கள், பொறியியல், வாகன உதிரிபாகங்கள், மின்னணு பாகங்கள், ஜவுளி, ஆபரணங்கள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளுக்கு அமெரிக்க சந்தையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துரதிர்ஷ்டம் – பொறாமை
ராகுல் போன்ற எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் நாட்டை குழப்ப முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் வளர்ச்சியை அவர்கள் வெறுப்பதாகவே தெரிகிறது.
செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், அதிநவீன தொழில்நுட்பங்கள், தரவு மையங்கள் போன்றவை இந்தியாவுக்கு வருவதிலும் அவர்கள் பொறாமை காட்டுகின்றனர்.
இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறுவது ராகுலுக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
