அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் நிலவி வரும் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்புடன் மற்றும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், யுஏஇயில் உள்ள இந்தியர்கள் அமைதியாக இருந்து, அந்நாட்டு அதிகாரிகள் வெளியிடும் அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் மற்றும் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை காரணமாக அந்த பிராந்தியத்தின் வான்வெளி சில பகுதிகளில் மூடப்பட்டுள்ளதால், வழக்கமான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிறுவனங்களின் சில சிறப்பு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவை பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. எனவே பயணத் திட்டங்கள் குறித்து அறிய பயணிகள் தங்கள் தொடர்புடைய விமான நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விசா காலாவதியான காரணத்தால் பிப்ரவரி 28க்கு பிறகு யுஏஇயிலிருந்து வெளியேற முடியாமல் அங்கு தங்கியிருக்கும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற காரணங்களால் நாடு திரும்ப முடியாமல் தங்கியிருப்பவர்களுக்கும் கூடுதல் நாட்கள் தங்குவதற்கான அபராதம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும், துபாயில் உள்ள தூதரக அலுவலகமும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. விசா, பாஸ்போர்ட் மற்றும் பிற தூதரக உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுஏஇயில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது அவசர உதவி தேவைப்பட்டால், 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்ணான 800-46342 என்பதைக் தொடர்பு கொள்ளலாம். அதேபோல் +971 543090571 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலமாகவும் உதவி கோரலாம். மேலும் pbsk.dubai@mea.gov.in மற்றும் ca.abudhabi@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் தற்போதைய சூழ்நிலை தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை இந்திய தூதரகம் தனது இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து வெளியிட்டு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
