இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தனது மற்றுமொரு முக்கியமான விண்வெளி சாதனையை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம் இலிருந்து, அமெரிக்காவின் ‘புளூபேர்ட் 6’ என்ற நவீன செயற்கைக்கோளை சுமந்தபடி ‘LVM3-M6’ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சுமார் 640 டன் எடையும், 43.5 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ராக்கெட், மூன்று நிலைகளை உடைய சக்திவாய்ந்த ஏவுகலனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்திற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டு இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஏவுதலின் முக்கிய நோக்கமான அமெரிக்காவின் ‘புளூபேர்ட் 6’ செயற்கைக்கோள், உலகளாவிய தொலைத்தொடர்பு சேவையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் கோபுரங்கள் அல்லது இணைய வசதி இல்லாத உலகின் மிக தொலைதூர மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் தடையற்ற செல்போன் இணைப்பை வழங்க இந்த செயற்கைக்கோள் உதவும்.
நேரடியாக கைபேசிகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் திறன் கொண்ட இந்த தொழில்நுட்பம், பேரிடர் காலங்களிலும் அவசர தகவல் பரிமாற்றத்திற்கும் பெரிதும் பயன்படும். வணிக ரீதியாக அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரோ நிகழ்த்தியுள்ள இந்த வெற்றி, சர்வதேச விண்வெளி சந்தையில் இந்தியாவின் நம்பகத்தன்மையும் வலிமையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது.
