புதுடில்லி: நாட்டை கட்டி எழுப்புவதில் முன்னணியில் இருப்பது இந்திய இளைஞர்களின் சக்தி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதுடில்லியில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்வின் இறுதி அமர்வில் பேசிய அவர், இளைஞர்களுக்காக மத்திய அரசு தொடர்ந்து திட்டங்களை தெளிவான கவனத்துடன் செயல்படுத்தி வருவதாக கூறினார். இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைவதற்கான பொறுப்புகளை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசத்தை கட்டி எழுப்புவதில் இந்திய இளைஞர்கள் முன்னணியில் உள்ளனர் என்றும், 2047ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு பெறும் போது, இளைஞர்களின் பயணம் மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம் என்றும், அவர்களின் வெற்றி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறினார்.
மேலும், சுவாமி விவேகானந்தர் அவர்களின் கருத்துகள் ஒவ்வொரு இளைஞருக்கும் உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் என்பதால் தான், ஜனவரி 12ஆம் தேதி விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடலாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
