வாய்ப்புகள் குறைந்ததா? ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி பெரும் சர்ச்சை
சினிமா துறை சமூக அடிப்படையிலானதாக மாறியதால் கடந்த எட்டு ஆண்டுகளாக தனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்து, திரைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான், பல மொழிகளில் இசை அமைத்து வருபவர். ஆஸ்கார் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள அவர், சமீபத்தில் ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், கடந்த எட்டு ஆண்டுகளாக தன்னிடம் வரும் சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில், “சினிமா துறை தற்போது சமூகம் சார்ந்த அணுகுமுறையைக் கொண்டதாக மாறியுள்ளது. இசைத்துறையின் அதிகார அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே பல இடங்களில் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். இது சமூக காரணங்களுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்,” என்று விளக்கினார்.
தமிழ் சமூகத்திற்கு எதிராக பாலிவுட்டில் பாகுபாடு உள்ளதா என்ற கேள்விக்கான பதிலாகவே அவர் இந்த கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சர்ச்சை பேட்டி
ரஹ்மானின் இந்த கருத்துகள் வெளியாகியதையடுத்து, திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அதற்கு எதிராக தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் ஷோபா டே, “இந்த கருத்து அபாயகரமானது. ஏன் ரஹ்மான் இவ்வாறு கூறினார் என்பது புரியவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக நான் பாலிவுட்டை கவனித்து வருகிறேன். சமூக அழுத்தம் இல்லாத இடம் என்றால் அது பாலிவுட் தான். திறமை இருந்தால் வாய்ப்பு கிடைக்கும்; இல்லையெனில் கிடைக்காது. அதற்கு சமூகம் காரணமாக இருக்க முடியாது. இவ்வளவு அனுபவமும் திறமையும் கொண்ட ஒருவர் இப்படிப் பேசக்கூடாது,” என்று விமர்சித்தார்.
எதிர்ப்பு கருத்துகள்
பிரபல திரைக்கதை ஆசிரியர் ஜாவேத் அக்தர் கூறுகையில், “ரஹ்மானின் கருத்தை என்னால் ஏற்க முடியாது. சினிமா துறை சமூக சார்புடையதாக மாறியதாக நான் கருதவில்லை. அவர் இப்படிப் பேசினார் என்பதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது,” என்றார்.
மேலும் அவர், “ரஹ்மான் மிகப் பெரிய இசை அமைப்பாளர். பலர் அவரை மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறார்கள். அதே நேரத்தில், அவரை அணுக முடியாது என்ற அச்சமும் பலரிடம் உள்ளது. அதனால் தான் சிலர் அவரை விட்டு விலகி நிற்கிறார்கள்,” என்றும் குறிப்பிட்டார்.
அச்சம்
நடிகை கங்கனா ரனாவத், “எனது எமர்ஜென்சி திரைப்படத்திற்காக இசை அமைக்க வேண்டும் என்று ரஹ்மானை அணுகியபோது, அவர் என்னை சந்திக்கவே மறுத்துவிட்டார். விளம்பரப் படத்திற்காக பணியாற்ற முடியாது என்றும் கூறினார்.
ரஹ்மான் போன்ற பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை,” என்று குற்றம்சாட்டினார்.
