வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசுக்கு கடும் கண்டனம் – அண்ணாமலை
சென்னை: எந்த மனசாட்சியும் இல்லாமல் மீண்டும் மேடை ஏறி மக்களை ஏமாற்ற முதல்வர் ஸ்டாலின் தயாராகி விட்டதாக, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றும் 65,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு மற்றும் முறையான ஓய்வூதியம் வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி எண் 313-ல் திமுக அறிவித்திருந்ததாக நினைவூட்டினார். ஆனால் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக, நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, இந்த வேலைநிறுத்தம் பள்ளி மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக அளித்த நூற்றுக்கணக்கான போலி வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்றும், அதன் பாதிப்பை இன்று சத்துணவு ஊழியர்களே அனுபவித்து வருவதாகவும் அவர் கூறினார். வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராடும் ஊழியர்கள் மீது கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு அடக்குமுறை செலுத்தும் அரசு, அதே நேரத்தில் மீண்டும் தேர்தல் மேடைகளில் மக்களை ஏமாற்றத் தயாராகி விட்டதாகவும் விமர்சித்தார்.
சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், மாணவர்களின் உணவு பாதிக்கப்படும் என்பது கூட திமுக அரசுக்கு புரியவில்லையா என கேள்வி எழுப்பிய அவர், ஊழியர்கள் கேட்பது அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கோரிக்கையே என்றும் தெரிவித்தார்.
முறையான பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கோரிக்கைகளை தீர்க்க நேரமில்லாத அரசு, எந்த அடிப்படையில் நாளொரு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறது எனவும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
