புதுடில்லி:
வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசுப் பணிகளுக்கான 61,000 பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் உரையாற்றுகையில், இந்தியா தற்போது பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்தார்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், புத்தாண்டு இளைஞர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் புதிய வாய்ப்புகளும் நிறைந்த புதிய அத்தியாயத்தை தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிப்பது தனது உறுதிப்பாடு என்றும் தெரிவித்தார். அந்த தொலைநோக்குப் பார்வையை நடைமுறைப்படுத்தும் முக்கிய முயற்சியாகவே ரோஜ்கர் மேளா திட்டம் செயல்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.
மேலும், வாழ்க்கையையும் வணிகத்தையும் எளிதாக்கும் நோக்கில் இந்தியா பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
