வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ்: தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரம் பேர் நீக்கம்!
சென்னை:
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். (சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்) பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையில், சென்னையில் மட்டும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
2026 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக, கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த பணிக்காக, தமிழகத்தில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்து திருப்பி அளிக்கப்பட்ட படிவங்கள், தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இந்த பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனை அடுத்து, இன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்குவதற்கு முன் தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் வாக்காளர்களாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, தமிழகத்தில்
ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர்,
பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 06 ஆயிரத்து 333 பேர்,
மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 191 பேர்,
மாற்றுத்திறனாளிகள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 355 பேர் என பதிவாகியுள்ளது.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூன்று முறை நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டபோதும் கண்டறிய முடியாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் பல இடங்களில் பதிவு செய்தவர்கள் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களில்,
26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்தவர்கள்,
66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் இடம்பெயர்ந்தவர்கள்,
3 லட்சத்து 39 ஆயிரத்து 278 பேர் இரட்டை பதிவுகள் காரணமாக நீக்கப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், அந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களை அணுகி படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு:
சென்னை – 14.25 லட்சம், காஞ்சிபுரம் – 2.74 லட்சம், செங்கல்பட்டு – 7.01 லட்சம், திருவள்ளூர் – 6.19 லட்சம், மதுரை – 3.80 லட்சம், சிவகங்கை – 1.5 லட்சம், ராமநாதபுரம் – 1.17 லட்சம், தேனி – 1.25 லட்சம், திண்டுக்கல் – 3.24 லட்சம், விருதுநகர் – 1.89 லட்சம், கோவை – 6.50 லட்சம், திருப்பூர் – 5.63 லட்சம், நீலகிரி – 56,091, ஈரோடு – 3.25 லட்சம், கன்னியாகுமரி – 1.53 லட்சம், கடலூர் – 2.46 லட்சம், விழுப்புரம் – 1.82 லட்சம், கள்ளக்குறிச்சி – 84,329, திருநெல்வேலி – 2.16 லட்சம், தென்காசி – 1.51 லட்சம், தூத்துக்குடி – 1.62 லட்சம், சேலம் – 3.62 லட்சம், கிருஷ்ணகிரி – 1.74 லட்சம், நாமக்கல் – 1.93 லட்சம், திருச்சி – 3.31 லட்சம், அரியலூர் – 24,368, கரூர் – 79,690, பெரம்பலூர் – 49,548, மயிலாடுதுறை – 75,378, நாகப்பட்டினம் – 57,338, தஞ்சாவூர் – 2.06 லட்சம், புதுக்கோட்டை – 1.39 லட்சம், வேலூர் – 2.15 லட்சம், ராணிப்பேட்டை – 1.45 லட்சம், திருப்பத்தூர் – 1.16 லட்சம், தர்மபுரி – 81,515, திருவாரூர் – 1.29 லட்சம், திருவண்ணாமலை – 2.52 லட்சம் வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்குகளும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தொகுதியான எடப்பாடியில் 26,375 வாக்காளர்களும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பு பணிக்கு திமுக தலைமை எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அந்தக் கட்சியினரே கணக்கெடுப்பு பணிகளில் முழுமையாக பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அதிமுக தரப்பில் பெரிதான முன்னெடுப்புகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு வாக்காளர் பட்டியலை தொடர்ந்து, பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் வரை புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணியில் தமிழக அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
