வதோதரா: 4-வது பெண்கள் பிரீமியர் லீக் (WPL) டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று வதோதராவில் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு பக்கம், வெளியேற்றுதல் சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
பெங்களூரு: அனுபவமும் தொடர்ச்சியும்
முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி, லீக் சுற்றில் முதல் 5 ஆட்டங்களை தொடர்ச்சியாக வென்று ஆதிக்கம் செலுத்தியது.
பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா (290 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (228), ரிச்சா கோஷ் (183) ஆகியோர் முக்கிய பலமாக உள்ளனர்.
பந்து வீச்சில் நடினே டி கிளார்க் (15 விக்கெட்), லாரென் பெல் (12), ஸ்ரேயங்கா பட்டீல், சயாலி சத்கரே ஆகியோர் தாக்கம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
டெல்லி: பார்மில் நட்சத்திரங்கள்
டெல்லி அணியின் பேட்டிங்கில் லிசெல் லீ (283 ரன்), லாரா வோல்வார்ட் (273), ஷபாலி வர்மா (239), கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (207) ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர்.
பந்து வீச்சில் நந்தினி ஷர்மா (16 விக்கெட்), ஸ்ரீசரனி (14), சினெலி ஹென்றி (12) எதிரணி பேட்டர்களை மிரட்டுகிறார்கள்.
சமபல மோதல்
நடப்பு சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியதில், தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இதனால் இறுதிப்போட்டி சமபல மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. டெல்லி அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வரிந்து கட்டுகிறது.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
