வங்கதேச மாணவர் தலைவர் மரணத்தால் மீண்டும் கலவரம்! ஹிந்து இளைஞர் கொடூரமாக எரித்து கொலை
டாக்கா:
வங்கதேசத்தில், மாணவர் – இளைஞர் அமைப்பின் தலைவராக இருந்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி மரணத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடும் பதற்றமும் கலவரமும் வெடித்துள்ளது. மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்ததை அடுத்து, பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த சூழலை பயன்படுத்தி, ஒரு கும்பல் ஹிந்து இளைஞரை கொடூரமாக தாக்கி கொன்று, அவரது உடலை சாலையில் போட்டு தீ வைத்து எரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
வங்கதேசத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் மூலம் முக்கிய மாணவர் தலைவராக உருவெடுத்தவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி (34).
ஜூலை மாத போராட்டத்துக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றார்.
அதன்பின்னர், ஷெரீப் ஓஸ்மான் ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்தார். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை இளைஞர்களிடையே பரப்பியதுடன், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில், டாக்காவில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி டாக்கா நகரின் புரானா பால்டன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர், ஷெரீப் ஓஸ்மானை சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். தலையில் பலத்த காயமடைந்த அவர், முதலில் டாக்கா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவத்தில், வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் மாணவர் அணி முன்னாள் உறுப்பினரான பைசல் கரீம் மசூத் என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் கண்டறிந்துள்ளனர். பைசல் பயன்படுத்திய பைக், அவரது சகோதரி வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு ஆலம்கீர் ஷேக் என்பவர் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இருவரையும் கைது செய்ய ‘இன்டர்போல்’ உதவியுடன் சர்வதேச அளவில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இவர்களைப் பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷெரீப் ஓஸ்மான் உயிரிழந்த செய்தியை அறிந்ததும், வங்கதேசத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் அவை கலவரமாக மாறின. தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு, கொலையாளிகளுக்கு நீதி வேண்டும் என கோஷம் எழுப்பினர். குற்றவாளிகள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுவதால், இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களும் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் அவாமி லீக் அலுவலகங்கள் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது.
மேலும், டாக்காவின் கவ்ரான் பஜார் பகுதியில் உள்ள பிரபல பத்திரிகைகளான ‘பிரைம் ஆலோ’ மற்றும் ‘டெய்லி ஸ்டார்’ அலுவலகங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்தனர். அலுவலகங்களில் சிக்கியிருந்த பத்திரிகையாளர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அதேபோல், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீதும் மீண்டும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் மொஹிபுல் ஹசன் சவுதுரி நவுபலின் இல்லமும் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. பல இடங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும், பல பகுதிகளில் பதற்றம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
மாணவர் – இளைஞர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி மறைவு மிகுந்த வேதனையளிப்பதாக, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
