டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், மறைந்த முன்னாள் பிரதமர் **கலீதா ஜியா**வின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
வங்கதேசத்தில் 2024ஆம் ஆண்டு இடஒதுக்கீடு பிரச்னையை தொடர்ந்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.
அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட நிலையில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட 11 கட்சிகள் கொண்ட கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
வங்கதேச பார்லிமென்டின் மொத்த பலம் 350. இதில் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 300 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்காக 42,779 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 7:30 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4:30 மணிக்கு நிறைவடைந்தது. 13 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். காலை முதலே மந்தமான ஓட்டுப்பதிவு நிலவியது. பிற்பகல் 2:00 மணி நிலவரப்படி 48 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
பொதுத் தேர்தலுடன், ‘ஜூலை சாசனம்’ எனப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்த பொது ஓட்டெடுப்பும் நடைபெற்றது. ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவானது. குல்னா நகரில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
தேர்தல் அமைதியாக நடைபெற 9 லட்சம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். ஐரோப்பிய யூனியன் மற்றும் காமன்வெல்த் அமைப்புகளைச் சேர்ந்த சர்வதேச பார்வையாளர்கள் தேர்தலை கண்காணித்தனர்.
ஓட்டுப்பதிவு முடிந்ததை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பின், ஷேக் ஹசீனா மற்றும் கலீதா ஜியா இல்லாமல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.
