வங்கதேச துாதருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
புதுடில்லி:
இந்தியாவை பிரிவினைவாதிகளின் மூலம் துண்டாக்குவோம் என வங்கதேச அரசியல் கட்சி தலைவர் ஒருவர் பேசிய விவகாரத்தை தொடர்ந்து, விளக்கம் கேட்பதற்காக வங்கதேச தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியா–வங்கதேச உறவுகளில் சுமூகத்தன்மை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் பல்வேறு வழிகளில் கோரிக்கைகள் விடுத்து வருவதுடன், மறைமுக அழுத்தங்களையும் உருவாக்கி வருகிறது. இதனால் இருநாடுகளுக்கிடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த பின்னணியில், கடந்த 15ஆம் தேதி டாக்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நேஷனல் சிட்டிசன் கட்சி தலைவர் ஹஷ்நத் அப்துல்லா, இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளுக்கு தங்குமிடம் அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரிக்க வங்கதேசம் உதவும் என்றும் அவர் கூறினார். இந்தியா தனது இறையாண்மை மற்றும் மனித உரிமைகளை மதிக்காத சக்திகளுக்கு தங்குமிடம் வழங்கினால், அதற்கு வங்கதேசமும் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த உரையை அங்கு கூடியிருந்தோர் கரகோஷமிட்டு வரவேற்றனர்.
இந்த பேச்சுக்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, இந்தியா ஒரு பெரிய நாடு என்றும், அணு ஆயுதங்கள் கொண்டதும், உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகவும் திகழ்வதாக குறிப்பிட்டார். அப்படிப்பட்ட நாட்டை பற்றி வங்கதேசம் இவ்வாறு பேசுவது எப்படி சாத்தியம் என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அரசியல் தலைவர் ஒருவர் வெளியிட்ட சர்ச்சை கருத்துகள் தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக, வங்கதேச தூதர் முகமது முஸ்தாபிஸூருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
