வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் உயிருடன் எரித்து கொலை; அதிர்ச்சியில் மக்கள்
டாக்கா:
வங்கதேசம்-இல் மேலும் ஒரு ஹிந்து இளைஞர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துகள் மீது தாக்குதல்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விரைவில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கி வருகின்றன.
இந்த நிலையில், நர்சிங்டி மாவட்டத்தில் 23 வயதுடைய சஞ்சல் சந்திர பவுமிக் என்ற ஹிந்து இளைஞர், ஜனவரி 24ஆம் தேதி உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
சஞ்சல் சந்திர பவுமிக், ஒரு கடையில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் கடையிலேயே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது. தீயில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதி மக்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளியில் இருந்து வந்த அடையாளம் தெரியாத சிலர் கடையின் கதவை வெளியே இருந்து பூட்டி, பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த சஞ்சல் சந்திர பவுமிக், கமிலா மாவட்டத்தின் லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். வேலை தேடி நர்சிங்டி மாவட்டம் வந்த அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த கடையிலேயே வேலை செய்து தங்கி வந்துள்ளார்.
அவரது தந்தை ஏற்கனவே மறைந்த நிலையில், நோய்வாய்ப்பட்ட தாயும், சகோதரர்களும் குடும்பத்தில் உள்ளதால், அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்று வேலை செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
