வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை: 21 நாட்களில் 6வது படுகொலை
Bangladesh-ல் கடந்த 21 நாட்களில் ஹிந்துக்கள் மீது நடந்த வன்முறைச் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்துக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த சில வாரங்களாக ஹிந்து இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே ஐந்து ஹிந்து நபர்கள் வன்முறைக் கும்பல்களால் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மைமன்சிங் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பஜேந்திர பிஸ்வாஸ் என்ற ஹிந்து நபர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கடந்த 21 நாட்களில் மட்டும் 6 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தொடர் கொலைகள், வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சிறுபான்மையினர் மத்தியில் கடும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இடைக்கால அரசு பொறுப்பேற்ற பின்னர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
📌 21 நாட்களில் நடந்த 6 கொலை சம்பவங்கள்
டிசம்பர் 18 – கலவரத்தின் போது தீபு சந்திர தாஸ் படுகொலை
டிசம்பர் 24 – அம்ரித் மண்டல் அடித்துக் கொலை
டிசம்பர் 31 – கோகன் சந்திர தாஸ் பெட்ரோல் ஊற்றி எரிப்பு (ஜனவரி 3ல் மரணம்)
ஜனவரி 5 – பத்திரிகையாளர் ரண பிரதாப் பைராகி சுட்டுக் கொலை
ஜனவரி 5 – நரசிங்கடி மாவட்டத்தில் சரத் சக்ரவர்த்தி மணி வெட்டி கொலை
ஜனவரி 6 – மைமன்சிங் மாவட்டத்தில் பஜேந்திர பிஸ்வாஸ் சுட்டுக் கொலை
