வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை கவலை அளிக்கிறது: இந்தியா கண்டனம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து இந்தியா கடும் கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் நிருபர்களிடம் பேசியுள்ளார்.
சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும் அவர்களின் உரிமைகளையும் உறுதி செய்ய, வங்கதேச அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனுடன், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் தாமதங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். விசா வழங்கும் விவகாரம் அந்த நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டதாக இருந்தாலும், இந்திய அதிகாரிகள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் இந்த பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். இந்த தாமதங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை இந்தியா ஆதரிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக முன்வைக்கப்படும் தவறான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறினார். சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை பேணுவது வங்கதேச இடைக்கால அரசின் பொறுப்பு என்றும், அந்நாட்டின் நிலைமையை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. சமீபத்தில் மைமென்சிங்கில் ஒரு ஹிந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. இடைக்கால அரசின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான 2,900-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஊடக மிகைப்படுத்தல் அல்லது அரசியல் வன்முறை என புறக்கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
