டாக்கா: வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் முறைப்படி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார்.
அண்மையில் நடைபெற்ற பார்லிமெண்ட் தேர்தலில், வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 297 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றிய அந்த கட்சி அரசு அமைக்கத் தகுதி பெற்றது. ஜமாத் ஏ இஸ்லாமி கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்றது.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு அதிபர் முகமது ஷாஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் நசீர் உதின் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வங்கதேசத்தில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண் பிரதமர் பதவியேற்றுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஷேக் ஹசீனா, கலீதா ஜியா உள்ளிட்ட பெண் தலைவர்களே பிரதமர் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது ஆண் பிரதமர் பதவியேற்றது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
