வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் சூழல் மிகவும் சிக்கலானதாக இருப்பதாகவும், அதனால் கவலை ஏற்படுவதாகவும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த எதிர்கட்சி தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறினார். அங்கு சில பொறுப்பற்ற சக்திகள் மிகுந்த முட்டாள்தனமான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து ஏழு மாநிலங்களை பிரிக்கப்போவதாக ஒரு மாணவர் தலைவர் சமீபத்தில் பேசியதை சுட்டிக்காட்டிய அவர், இப்படிப் பேச அந்த நபருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற சக்திகள் தற்போது பலவீனமடைந்து வருவதாக நாங்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், வங்கதேசத்துக்குள் இந்தியாவின் அடிப்படை நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சசி தரூர் தெரிவித்தார்.
மேலும், வங்கதேசத்தில் அமைதி மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்பதில் இந்தியா உறுதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
