குஜராத் சட்டசபையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி அறிவித்தார்.
அவர் கூறுகையில், மாநிலத்தில் பெண்கள் ஏமாற்றப்பட்டு சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்வதாகவும், ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கவலைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திருமண பதிவு சட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை பயன்படுத்தி சில சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், அவற்றை தடுக்கும் நோக்கில் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறினார்.
தற்போதைய முறையில் உள்ள குறைபாடுகளை களைந்து, முறைகேடுகளை கட்டுப்படுத்துவதே இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம் எனவும் விளக்கினார்.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் 30 நாட்களுக்குள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
