சென்னை: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாக கூறப்படும் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாததால், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024–25ஆம் ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிட நியமனங்களில் லஞ்சம் பெறப்பட்டதாக கூறி, வழக்குப் பதிவு செய்யுமாறு கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
அத்துடன் 232 பக்க ஆவணங்களும் அனுப்பப்பட்டன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், மனுதாரர் இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவு இருந்தும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று முறையிட்டார்.
இதற்கு நீதிபதிகள், இதுகுறித்து மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். அதன்படி, இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் கூறப்பட்டதாவது:
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கோரி கடந்த 25ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை; இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
அரசியல் செல்வாக்கால் அமைச்சர் நேரு துறையில் நடந்ததாக கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்குப் பதிவு தடுக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பு இயக்குநர் ஏ.டி.துரைகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
