ரோடு முதல் வீடு வரை மக்கள் திமுகவை திட்டுகின்றனர்: அண்ணாமலை பேச்சு
புதுக்கோட்டை: தமிழகத்தில் ரோடு முதல் வீடு வரை மக்கள் திமுகவை திட்டி வருவதாக, புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட யாத்திரையின் நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இந்த யாத்திரை அமைந்துள்ளது. இருண்ட ஆட்சியிலிருந்து தமிழகத்தை மீட்டு, 2026-ல் தேஜ கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். நாடு முழுவதும் உள்ளதைப் போல, **நரேந்திர மோடி**யின் நல்லாட்சி தமிழகத்திலும் அமைய வேண்டும் என்றார்.
சந்தி சிரிக்கிறது
54 இடங்களில் யாத்திரை மேற்கொண்டு, 13 ஆயிரம் மனுக்களை பெற்று, லட்சக்கணக்கான மக்களை சந்தித்து குறை, நிறை கேட்டு இந்த யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. மாநில அரசை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு இந்த யாத்திரை முடிவடைந்துள்ளதாக அவர் கூறினார். பல இடங்களில் போலீசார் அனுமதி மறுத்தும், தடைகள் விதித்தும் யாத்திரை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நக்சல் இல்லாத பாரதம்
தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் கூட முதல்வர் மு.க. ஸ்டாலின் விட அமித் ஷா குறித்து மக்கள் அதிகம் அறிந்துள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் 2026-க்குள் நக்சல் இல்லாத பாரதம் என்ற இலக்கை அமித் ஷா எடுத்துள்ளதையும், அந்த இலக்கை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
திமுக மீதான விமர்சனம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திமுக குறித்து எவ்வளவு பேசினாலும் அது போதாது; மக்கள் தங்களாகவே ரோடு முதல் வீடு வரை திமுகவை திட்டி வருவதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.
காலம் கடத்தல்
முதல்வர் ஸ்டாலின் கடந்த நான்கு ஆண்டுகளாக என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் காலம் கடத்தி உள்ளார். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்றி வாழும் நிலை உருவாகியுள்ளது. போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் மட்டும் காணப்படுகிறது என்றார்.
கடன்
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த போது ஒரு ரேசன் கார்டுக்கு ரூ.2.04 லட்சம் கடன் இருந்தது. தற்போது அது ரூ.4.51 லட்சமாக உயர்ந்துள்ளதாக கூறிய அவர், மக்கள் மீது கடன் சுமையை ஏற்றி வைத்து ஓட்டு அரசியல் நடத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார்.
பொய் வாக்குறுதிகள்
505 தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் கூறுவது பச்சைப் பொய் என்றும், உண்மையில் 50 வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார். உண்மையில் நிறைவேற்றியிருந்தால் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் சவால் விட்டார்.
முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு
தமிழகத்துக்கு வர வேண்டிய நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகவும், இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்றும் அவர் கூறினார். 2026 சட்டசபை தேர்தலில் இந்த நிலை மாற்றப்படும் என்றும், தேஜ கூட்டணி ஆட்சியே தமிழகத்தை மீண்டும் முன்னேற்றும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
