ரீல்ஸ் போட்ட திமுக எம்எல்ஏ.,வை வெளுக்கும் நெட்டிசன்கள்
சென்னை:
திருவள்ளூரில் சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த அரசு பள்ளிக்கு, சில நாட்களுக்கு முன்பு ஆய்வுக்கு சென்ற திமுக எம்எல்ஏ., மாணவர்களிடம் “முதல்வர் யார், துணை முதல்வர் யார்” என கேள்விகள் கேட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தது தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு கவனமாக ரீல்ஸ் எடுத்த எம்எல்ஏ.,க்கு பள்ளியின் சேதமடைந்த காம்பவுண்ட் சுவர் தெரியவில்லையா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு பயின்ற மாணவன், மதிய உணவு இடைவேளையின் போது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பள்ளி கட்டட பராமரிப்பில் அரசு காட்டிய அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என கூறி, மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர் தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த பள்ளிக்கு சில நாட்களுக்கு முன்பு, திருத்தணி தொகுதி திமுக எம்எல்ஏ., சந்திரன் ஆய்வுக்கு சென்றிருந்தது தெரியவந்துள்ளது. அப்போது அவர் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு, அதை ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், மாணவர்களிடம் முதல்வர் பெயர் என்ன, துணை முதல்வர் யார், கல்வி அமைச்சர் யார் என்பன போன்ற கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.
தற்போது அந்த வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இணையவாசிகள் எம்எல்ஏ.,வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ.,க்கு காம்பவுண்ட் சுவர் சேதமடைந்திருந்தது தெரியவில்லையா? அதை கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயர சம்பவம் நடந்திருக்காது. பள்ளிக்கு சென்று ரீல்ஸ் எடுப்பதைவிட, மாணவர்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
