உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில், இன்று (ஜனவரி 10) ஏற்பட்ட விஷமச்செயல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை ராமரை தரிசிக்க வரும் நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள சீதா ரசோய் பகுதியை ஒட்டிய பகுதியில், காஷ்மீரி உடையில் வந்த ஒருவர் திடீரென அமர்ந்து நமாஸ் செய்யத் தொடங்கினார். இதை கவனித்த பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக அவரை தடுத்தனர்.
அப்போது அந்த நபர் மத ரீதியிலான கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர், ஜம்மு–காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான அபு அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அஜ்மீர் தர்காவிற்கு செல்லும் வழியில் இருந்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கடும் பாதுகாப்பு வளையம் கொண்ட ராமர் கோவில் வளாகத்திற்குள் அவர் எப்படி நுழைந்தார், அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
மகர சங்கராந்தி மற்றும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் இரண்டாம் ஆண்டு விழா நெருங்கி வரும் நிலையில், அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
