ராணி வேலு நாச்சியார் பிறந்த நாள்: வீரமங்கைக்கு பிரதமர் மோடி புகழாரம்
சென்னை: வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், துணிச்சலும் வியூகத் திறமையும் கொண்ட வீராங்கனையாக அவர் நினைவுகூரப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தியதாகவும், நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேபோல், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், சிவகங்கை சீமையின் வீரமங்கையான ராணி வேலு நாச்சியார் வீரமும் அறிவும் ஒன்றாய் இணைந்த பெண் விடுதலை வீரர் என குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு விதிக்கப்பட்ட சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து, அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் எடுத்த முதல் பெண் விடுதலை வீரர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது பதிவில், ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியாவில் முதன் முறையாகப் போராடிய பெண் அரசியாக ராணி வேலு நாச்சியார் திகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். மருது சகோதரர்களுடன் இணைந்து ஐரோப்பியர்களுக்கு எதிராக போரிட்டு திருப்பத்தூர் கோட்டையை கைப்பற்றிய அவரது வீரதீர நினைவுகளைப் போற்றி வணங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் அறிவு, தைரியம் மற்றும் மக்கள் மீதான அக்கறை கொண்டவராக ராணி வேலு நாச்சியார் திகழ்ந்தார் என குறிப்பிட்டுள்ளார். தமிழ் மண்ணில் பெண்கள் துணிச்சலிலும் தீர்க்கத்திலும் தலைசிறந்தவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
