புதுடில்லி: ராகுல் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறார் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். பொய்களைச் சொல்லி விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சி செய்து வருகிறார். நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி விவசாயிகளுக்கும் நாட்டிற்கும் சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளார். விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததாவது: இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.
ராகுல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் எனவும் அவர் கூறினார்.
