புவனேஸ்வர்:
ராகுல் குறித்து சோனியா காந்தியிடம் கடிதம் மூலம் புகார் அளித்த ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவை, கட்சியில் இருந்து நீக்கம் செய்ய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி வலிமை இழந்து வருவதாக, அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய தலைவருமான சோனியா காந்தியிடம், ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும் காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது மொகிம் கடிதம் எழுதியிருந்தார். 5 பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார்.
மேலும், கட்சியின் தலைமையுக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதாகவும், 83 வயதான கார்கே இளைய தலைமுறையினருடன் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே, ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமாந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட இளம் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான தவறான முடிவுகள், மோசமான தலைமுறை நிர்வாகம் மற்றும் தகுதியற்றவர்களுக்கு பொறுப்பான பதவிகளை வழங்கியதுதான் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்றும், முகமது மொகிம் அந்தக் கடிதத்தில் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, முகமது மொகிமை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
