ராகுலால் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்: கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் நாட்டின் பாதுகாப்புக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், பார்லிமென்ட் ஜனநாயகத்தில் கூச்சல், குழப்பம் ஏற்படுவது இயல்பானது என்றாலும், அந்த சூழலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முக்கியம் என குறிப்பிட்டார். தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் சபாநாயகர் மீது காகிதங்கள் வீசுதல் அல்லது ஆளுங்கட்சி வரிசையை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிப்பதாக கூறிய அவர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்கு ஏற்ற பொறுப்புணர்வுடன் ராகுல் செயல்படவில்லை என விமர்சித்தார். பார்லிமென்ட் வளாகத்தில் மக்களை குறை கூறுதல், நாடகத்தனமான போராட்டங்களில் ஈடுபடுதல் போன்றவை சிறுபிள்ளைத்தனமாக உள்ளன என்றும் சாடினார்.
மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஏற்க முடியாதவை என கூறிய அமைச்சர், பிரதமரை குற்றஞ்சாட்டினால் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், தீவிரவாத மற்றும் பிரிவினைவாத சிந்தனையுடையவர்களை சந்திப்பதாகவும் ராகுல் மீது அவர் குற்றஞ்சாட்டினார்.
ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் முதிர்ச்சி மற்றும் அனுபவம் மிக்க தலைவர்கள் இருந்தனர்; தற்போது கட்சியின் போக்கு மாறி விட்டது என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
