ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவை மட்டும் குறிவைப்பது நியாயமல்ல – ஜெய்சங்கர்
புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தடைகள் விதிப்பது நியாயமல்ல என்று, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த கொள்முதல் மூலம் இந்தியா மறைமுகமாக உக்ரைன் போருக்கு ஆதரவு அளிக்கிறது என அமெரிக்கா குற்றம் சாட்டி, கூடுதல் வரிகளையும் விதித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து ஐரோப்பிய யூனியனும் இந்திய மற்றும் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு தடைகள் விதித்துள்ளது.
இந்தச் சூழலில், கடந்த ஆண்டு முதல் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாக குறைத்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் நட்பு நாடான போலந்து துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ரடோஸ்லா சிகோர்ஸ்கி அரசுமுறை பயணமாக டில்லி வந்தார். அவருடன் நடைபெற்ற சந்திப்பின் போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் அழுத்தம் தொடர்பாக ஜெய்சங்கர் விரிவாக விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவை மட்டும் குறிவைத்து தடைகள் விதிப்பது நியாயமல்ல என்றும் வலியுறுத்தினார். நாட்டின் தேவைக்காகவே கச்சா எண்ணெய் வாங்கப்படுவதாகவும், அதற்கு இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், போலந்து துணை பிரதமர் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தை சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், அண்டை நாட்டில் பயங்கரவாத உட்கட்டமைப்புகள் வளர்வதற்கு எந்த வகையிலும் ஆதரவு அளிக்கக்கூடாது என்றும், பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் இந்தியா ஏற்காது என்றும் தெளிவுபடுத்தினார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. மூலமான சர்வதேச மத்தியஸ்தம் குறித்து போலந்து தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கும் கடும் ஆட்சேபம் தெரிவித்த ஜெய்சங்கர், இந்த விவகாரம் முழுமையாக இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்றும், வெளிநாட்டு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்றும் கூறினார்.
