“ரஷிய அதிபர் புதின் இல்லத்தை குறிவைத்து தாக்குதல்” – பிரதமர் மோடி கவலை
புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்லம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தகவல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ரஷ்ய அதிபரின் இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் மிகவும் கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை அடைவதற்கான மிகச் சாத்தியமான வழிமுறை ராஜதந்திர முயற்சிகள் மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ராஜதந்திர முயற்சிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அமைதி முயற்சிகளை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா–உக்ரைன் போருக்கு தீர்வாக பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மட்டுமே அவசியம் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திங்கள்கிழமை கூறுகையில், மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இடையே உள்ள நோவ்கோரோட் பகுதியில் அமைந்துள்ள புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தை குறிவைத்து, கடந்த டிசம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் உக்ரைன் 91 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். அந்த ட்ரோன்கள் அனைத்தும் இடைமறித்து வீழ்த்தப்பட்டதாகவும், இதில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், இந்த தாக்குதல் தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் எனவும் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மேற்கொண்ட தனது முயற்சிகளை ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டு பலவீனப்படுத்தும் என்றும், அதனை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
