யு.ஏ.இ. திரும்பிப் பார்த்தது இந்தியா பக்கம்; பாகிஸ்தானுக்கு புதிய பின்னடைவு
அபுதாபி:
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு திடீரென விலகியுள்ளது. இந்த முடிவு, பாகிஸ்தானுக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அரசு சொத்துகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க யு.ஏ.இ. அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியா பயணத்திற்குப் பின் முடிவு
இதற்கிடையில், யு.ஏ.இ. அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சமீபத்தில் இந்தியாவுக்கு அவசர பயணம் மேற்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி யை சந்திக்க, வெறும் சில மணி நேரம் மட்டுமே இந்தியாவில் தங்கி, இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த பயணத்திற்கு பின்னரே, பாகிஸ்தானுடன் செய்யப்பட்ட விமான நிலைய ஒப்பந்தத்தில் இருந்து யு.ஏ.இ. அரசு பின்வாங்கியுள்ளது. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணம் என அதிகாரபூர்வமாக கூறப்பட்டாலும், இந்த முடிவு நேரம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்திய கைதிகள் விடுதலை
மேலும், யு.ஏ.இ. சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 900 இந்திய கைதிகளை விடுவிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கான அபராதத் தொகையையும் யு.ஏ.இ. அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
இந்த தொடர் நடவடிக்கைகள், யு.ஏ.இ. தனது வெளிநாட்டு கொள்கையில் இந்தியாவுக்கு அதிக முன்னுரிமை வழங்கத் தொடங்கியிருப்பதைக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாகிஸ்தானுடன் உள்ள உறவுகளில் இடைவெளி அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
