உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், தனது கேமிங் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷா சர்மாவை நியமித்துள்ளது.
ஆஷா சர்மா, மின்னசோட்டா பல்கலையின் கார்ல்சன் மேலாண்மை பள்ளியில் பட்டம் பெற்றவர். நவீன தொழில்நுட்ப பொருளாதாரம், சந்தை, சமூக வலைதளங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் அனுபவம் பெற்றுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முக்கிய பிரிவின் தலைவராக பணிபுரிந்து வந்த அவர், இதற்கு முன் மெட்டா நிறுவனத்தின் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரிவுகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவின் தலைவராக இருந்த பில் ஸ்பென்சர், தனது நீண்டகால பணிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த பொறுப்பு ஆஷா சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்ப துறையில் அனுபவம் பெற்றுள்ள ஆஷா சர்மாவின் தலைமையில், கேமிங் துறையில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, “கேமிங் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஆஷா சர்மாவின் அனுபவம் பெரிதும் உதவும்” என பாராட்டியுள்ளார்.
2026ம் ஆண்டு மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவு தொடங்கி 25வது ஆண்டு நிறைவை எட்டுகிறது. எக்ஸ்பாக்ஸ் தளத்திற்கு மாதந்தோறும் 50 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“கேமிங் என்பது ஒரு கலை. மனிதர்களின் படைப்பாற்றலை முன்னிலைப்படுத்தி, மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவை மேலும் வலுப்படுத்துவதே என் இலக்கு” என ஆஷா சர்மா தெரிவித்துள்ளார்.
