மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகளுக்கு தீர்வு காண, ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த வாரம், எஸ்.ஐ.ஆர் பணிகளை விரைவுபடுத்த மாவட்ட நீதிபதிகள் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதிகளை பணியமர்த்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சுமார் 50 லட்சம் முறையீடுகள் நிலுவையில் உள்ள நிலையில், மொத்தம் 250 நீதித்துறை அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.
ஒரு நீதிபதி தினமும் 250 வழக்குகளுக்கு தீர்வு அளித்தாலும், அனைத்து முறையீடுகளையும் முடிக்க குறைந்தது 80 நாட்கள் தேவைப்படும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த அமர்வு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் கொண்ட மூத்த நீதிபதிகளை எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடுத்தலாம் என அனுமதி அளித்தது. திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பிற மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள் வங்காள மொழியில் புலமை பெறாமல் இருக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா பகுதிகள் வரலாற்றில் மேற்கு வங்கத்துடன் தொடர்புடையவை என சுப்ரீம் கோர்ட் அமர்வு குறிப்பிட்டது.
