புதுடில்லி:
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 58 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில், தமிழகத்தைப் போலவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 11ம் தேதி வரை நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இறப்பு, இடமாற்றம், இரட்டைப் பதிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மொத்தமாக 58 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், 24.17 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்தவர்களாகவும், 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், 12.20 லட்சம் வாக்காளர்கள் குறிப்பிடப்பட்ட முகவரிகளில் இல்லாதவர்களாகவும், 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர் பெயர்களை சேர்த்தல் அல்லது நீக்குதல் தொடர்பான கோரிக்கைகள் ஜனவரி 15ம் தேதி வரை பெறப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை விசாரணை மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
