மேற்கு வங்கத்தில் மாற்றம் தேவை; பா.ஜ., ஆட்சி அமைய வேண்டும் – பிரதமர் மோடி
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் என்றும், அந்த மாற்றத்தை பா.ஜ., மட்டுமே கொண்டு வர முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கிழக்கு இந்தியாவின் பல மாநிலங்களை பா.ஜ., வெறுப்பு அரசியலிலிருந்து மீட்டுள்ளதாக கூறினார்.
மேற்கு வங்க மக்களிடையே மாற்றத்திற்கான ஆழமான விருப்பம் இருப்பதை தான் உணர்வதாகவும், பீஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்குப் பிறகு, இப்போது மேற்கு வங்கத்தின் வரிசை வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக பா.ஜ., அரசு அமைவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேற்கு வங்கத்திற்கு நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலும், நான்கு புதிய அம்ரித் பாரத் ரயில்களும் கிடைத்திருப்பதை நினைவூட்டிய பிரதமர், வீடில்லாத மக்களுக்கு வீடுகள் மற்றும் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு முழு முயற்சி மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சி அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
40 முறை நிதி..!
மேற்கு வங்கம், பா.ஜ., ஆட்சி நடைபெறும் மாநிலங்களால் சூழப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், ஒடிசாவில் முதல் முறையாக பா.ஜ., அரசு அமைந்துள்ளதையும், திரிபுராவில் பல ஆண்டுகளாக மக்கள் பா.ஜ., மீது நம்பிக்கை வைத்து வருவதையும் எடுத்துரைத்தார்.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மக்களை கொள்ளையடிக்கும் ஆட்சியாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டிய பிரதமர், மத்திய அரசு திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்த தொடர்ந்து தடைகள் விதிக்கப்படுவதாக கூறினார். மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு 40 முறை வெள்ள நிவாரண நிதி அனுப்பிய போதும், அது பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று சேரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நீக்கப்பட்டு பா.ஜ., அரசு அமைந்தால்தான் மேற்கு வங்கம் உண்மையான வளர்ச்சியை அடையும் என்றும், மாநிலத்தின் மிகப்பெரிய சவாலாக ஊடுருவல் பிரச்னை இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். பா.ஜ., வெற்றி பெறாது என நினைக்கப்பட்ட பகுதிகளிலும் இப்போது மக்கள் ஆதரவு கிடைத்து வருவதாக கூறிய அவர், இளைஞர்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் பா.ஜ., மீது வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இதுவென்றார்.
மக்கள் தீர்ப்பு
பல ஆண்டுகளாக பா.ஜ., குறித்து பொய்யான பிரசாரங்கள் நடத்தப்பட்ட பகுதிகளிலும் தற்போது மக்கள் உண்மையை உணர்ந்து ஆதரவு அளித்து வருவதாக பிரதமர் கூறினார். மால்டாவில் கூடிய மக்களின் உற்சாகத்தைப் பார்த்தால், இந்த முறை மேற்கு வங்க மக்கள் பா.ஜ.,வுக்கு மகத்தான வெற்றியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
