புதுடில்லி: மேற்காசியாவில் நிலவி வரும் பதற்ற நிலைமைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 9) காலை 11 மணிக்கு தொடங்கியது. லோக்சபாவில் மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ராஜ்யசபாவில் டி-20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியினருக்கு அவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஈரான்–இஸ்ரேல் போரின் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து மேற்காசிய நிலவரம் குறித்து ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
மேற்காசிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்பதையே இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேற்காசிய நிலவரத்தை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அங்கு நிலவும் பதற்றத்தை குறைத்து, அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டு வர சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரான்–இஸ்ரேல் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா விரும்புகிறது என்றும், இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த போர் ஈரான்–இஸ்ரேல் அல்லது அமெரிக்கா மட்டும் தொடர்புடையதல்ல. அந்தப் பிராந்தியத்தை சுற்றியுள்ள பல நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் கூறினார். மேற்காசிய நிலைமை கவலைக்குரியது என்றும், அனைத்து தரப்பினரும் நிதானமாக செயல்பட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும் அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் வசித்து வேலை செய்து வருகின்றனர். ஈரானிலும் கல்வி அல்லது வேலைவாய்ப்புக்காக சில ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அங்கு இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மத்திய அரசு கவனித்து வருவதாகவும், இந்த பிரச்னையைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
