மாஸ்கோ: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்தி, மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பதற்றத்தின் பின்னணியில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ஆட்சியாளர் கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஈரானில் உள்ள அரசு மற்றும் ராணுவத் தளங்கள் பலவும் தாக்குதலில் சேதமடைந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய பதற்ற நிலையை உடனடியாக குறைத்து வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் அரசியல் மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கி, பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐநா அமைப்பின் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
