புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்ஷியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
ஈரான் மதத்தலைவரும் அந்த நாட்டின் ஆட்சியாளருமான கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானதையடுத்து மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பல நாடுகளின் வான்வெளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அரபு நாடுகளில் சிக்கித் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கைகள் அல்லாது பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிகளில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கமேனி மரணத்திற்காக வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் இந்திய அரசின் சார்பில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் மேற்காசியாவில் உருவாகியுள்ள பதற்றமான நிலைமை குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்ஷியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இந்த தகவலை ஜெய்சங்கர் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
