கோல்கட்டா:
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மேற்கு வங்க மாநில விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த டிசம்பர் 13ம் தேதி, அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ‘கோட் டூர்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக பல கால்பந்து ரசிகர்கள் ரூ.20 ஆயிரம் வரை விலை உயர்ந்த டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.
ஆனால், மெஸ்ஸியை நேரில் பார்க்க முடியாததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். மெஸ்ஸி மைதானத்தில் சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படாததால், அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சில ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை மெஸ்ஸி நோக்கி வீசியதாகவும், மெஸ்ஸி வெளியேறியதும் ஆத்திரமடைந்த ரசிகர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி, மைதான சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மெஸ்ஸி மற்றும் விளையாட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஓய்வுபெற்ற நீதிபதி அஷிம் குமார் ரே தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவையும் அமைத்தார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்று, விளையாட்டு அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
