கர்நாடகா, தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களைத் தொடர்ந்து, சம்பவ இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று சம்பவங்களிலும் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவின் பாஹல்கோட் பகுதியில், சத்ரபதி சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலம் மசூதி வழியாக சென்றபோது, மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி. சித்தார்த் கோயலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆம்பர்பேட்டையில், ரம்ஜான் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஊர்வலம் சென்றபோது, அதிக சத்தத்துடன் இசை ஒலிபரப்பியதாக கூறி எதிர்ப்பு எழுந்தது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் காயமோ, சொத்து சேதமோ ஏற்படவில்லை. பதற்றத்தைத் தணிக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசம் ஜபல்பூரின் சிஹோரா பகுதியில் உள்ள துர்கா கோவில் வளாகம் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து மோதல் ஏற்பட்டது. கற்கள் வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றதால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 49 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
