முஸ்தபிசுர் ரகுமானை ஐபிஎல் அணியிலிருந்து நீக்கியதற்கு சசி தரூர் கண்டனம்
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில், வங்காளதேசத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமான-ஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்த நிலையில், வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் கூறி, ஐபிஎல் தொடரில் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட விடக் கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு இந்து அமைப்புகள், வங்காளதேச வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இதையடுத்து, கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மீதும் கண்டனங்கள் வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, முஸ்தபிசுர் ரகுமானை அணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என பிசிசிஐ கோரியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக அறிவித்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
“பிசிசிஐ, முஸ்தபிசுர் ரகுமானை மிகவும் பரிதாபகரமான முறையில் அணியிலிருந்து நீக்கியுள்ளது. ஒருவேளை வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து வீரர்களான லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்க்கார் அணியில் இருந்திருந்தால், பிசிசிஐ என்ன செய்திருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் – இங்கு நாம் யாரை தண்டிக்கிறோம்? விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல,” என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
