டொரான்டோ: மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளான தஹாவூர் ராணாவின் கனடா குடியுரிமையை ரத்து செய்ய கனடா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த சதி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக பாகிஸ்தானில் பிறந்த தஹாவூர் ராணா, 64, மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 1997ல் கனடாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டு குடியுரிமை பெற்றிருந்தான்.
பின்னர், மற்றொரு வழக்கில் 2019ல் கைது செய்யப்பட்ட ராணா, அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். கடந்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளான்.
இந்நிலையில், 2000ஆம் ஆண்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோது பொய் தகவல்கள் வழங்கியதாக கண்டறியப்பட்டதால், அவரது குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலத்தில் கனடா–இந்தியா உறவு சிக்கலுக்கு உள்ளானது. தற்போதைய பிரதமர் மார்க் கார்னி, இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். அவர் இந்தியா வர உள்ள நிலையில், ராணா குடியுரிமை ரத்து நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
