துடில்லி: உலகின் முதல் மூன்று செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா திகழ வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “இன்று ஏஐ முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. இது மனிதர்களின் திறனை முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்த்தக்கூடிய தொழில்நுட்பம்.”
விவசாயத் துறையில் ஏஐயின் பயன்பாட்டை எடுத்துக்காட்டிய அவர், பாரத் விஸ்தார் திட்டத்தின் வாயிலாக பயிர் ஆலோசனை, மண் பரிசோதனை, வானிலை தகவல் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் சிறந்த முடிவுகளை எடுக்க முடிகிறது என்றார்.
இந்தியாவின் பாரம்பரியங்களை பாதுகாப்பதிலும் ஏஐ புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும், பழங்கால ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி அவற்றின் விளக்கங்களை அறிய இது உதவுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு வளரும் நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. ஆதார், யுபிஐ போன்ற அமைப்புகளின் வெற்றி சாதாரணமானது அல்ல. ஏஐ துறையில் இளைஞர்களை ஆற்றல் மிக்கவர்களாக மாற்ற அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய பட்ஜெட்டிலும் டேட்டா மையங்கள், கிளவுட் உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
ஐடி துறையின் வளர்ச்சி குறித்து அவர் கூறுகையில், 2030க்குள் இந்தியாவின் ஐடி துறை 400 பில்லியன் டாலரை எட்டும் என்ற கணிப்பு உள்ளதாகவும், ஏஐ என்பது ஐடி துறைக்கு மாற்றாக அல்ல, அதில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
“தொழில்நுட்பம் மகத்தான ஆயுதம். அதை நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ஏஐ மனிதர்களின் திறனை மேம்படுத்தினாலும், முடிவு எடுக்கும் பொறுப்பு மனிதர்களிடமே இருக்க வேண்டும்,” என்றார்.
ஏஐயில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கான மூன்று அடிப்படை கொள்கைகளாக இறையாண்மை, புதுமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை பிரதமர் முன்வைத்தார்.
“நாம் ஏஐயின் நுகர்வோராக மட்டுமல்ல, படைப்பாளிகளாகவும் இருக்க வேண்டும். உலகின் முதல் மூன்று ஏஐ வல்லரசுகளில் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்,” என பிரதமர் மோடி கூறினார்.
